“Book Descriptions: மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம் மகாபாரதத்தில் உள்ளது. இந்தியப் பண்பாடு உருவாகிவந்த முழுச்சித்திரமும் அதில் உண்டு. பாரதவர்ஷம் என்று சொல்லப்படும் நிலத்தின் அனைத்துப்பகுதிகளையும் மகாபாரதம் சித்தரிக்கிறது. அனைத்து மக்களையும் விவரிக்கிறது.
அத்துடன் என்றும் மனிதகுலம் எதிர்கொள்ளும் அடிப்படையான அறக்கேள்விகள் அனைத்தையும் அது ஆராய்கிறது. அழியாத ஞானத்தை அவற்றுக்கான விடைகளாக அளிக்கிறது. அந்த ஞானத்தை நோக்கிச்சென்ற மாமனிதர்களின் உணர்ச்சிகளையும் தேடல்களையும் மோதல்களையும் வீழ்ச்சிகளையும் மீட்புகளையும் சித்தரிக்கிறது. ஆகவே ஒரு ஞானநூலாகவும் பேரிலக்கியமாகவும் ஒரேசமயம் திகழ்கிறது. சென்றகால வரலாறாகவும் இன்றைய வாழ்க்கையாகவும் உள்ளது.