“Book Descriptions: ‘குறத்தி முடுக்கு’ ஓர் இடமல்ல, ரத்தமும் நிணமும் சீழும் ஓயாமல் கசியும் ஆறாத ரணம். தான் உயிர்தப்ப, பல்லி துறந்த வால். பிறகு அதே பல்லியின் தினவுக்கு வடிகாலான அவலம். மும்பையின் காமாட்டிபுரா, கொல்கொத்தாவின் சோனாகாச்சி போல, தமிழ்நாட்டுத் திருநெல்வேலியில் ஜி. நாகராஜன் கற்பனையாய் உருவாக்கிய விலைப்பெண்டிர் தெரு. ‘குறத்தி முடுக்’கின் பிரவாகத்தில் அமிழ்ந்து மூச்சுத்திணறும் பெண்கள் ஒருபுறம்; சந்தர்ப்பவசத்தால் சிக்கிக்கொண்ட தொழிலுக்கு உடம்பையும் கொஞ்சமும் மங்கிவிடாதபடி தான் அடைகாக்கும் கனவுக்கு மனத்தையும் கொடுத்து நீர் ஒட்டாத இலைபோல வாழும் தங்கம் மறுபுறம்; இருதரப்பையும் ஒரு மாயக்கோடுபோல இணைக்கும் பத்திரிகையாளன் என மூன்று தரப்புகளின் சங்கமம் இந்தக் குறுநாவல். மேலோட்டமாகத் தென்படும் உரையாடல்களில், பாத்திரங்களின் அகஉலக ஆழத்தை நுட்பமாகச் சித்திரிப்பதில் அலாதித்திறன் கொண்டவர் ஜி.நாகராஜன் இன்றைய சுதந்திரத்தைத் தமிழ்ப் புனைகதை எட்டியிராத காலகட்டத்தில் ‘குறத்தி முடுக்’கை எழுதியிருக்கிறார் என்பது அவரது தீரத்துக்கும் கரிசனத்துக்கும் சான்று. பொதுவாகவே ஜி. நாகராஜனின் படைப்புகளில் ஒருவிதக் கைப்புச்சுவை உண்டு. ‘குறத்தி முடுக்’கிலும் நிராசையின் குரல் ஓங்கித்தான் ஒலிக்கிறது. ஆனால் அதையும் மீறி, மனித மனத்தில் இயற்கையாக ஊற்றெடுக்கும் வாஞ்சையும் கம்பீரமும் இந்தக் குறுநாவலில் முன்நிற்கின்றன.” DRIVE